Friday, June 8, 2012

தமிழன் கண்ட உயிர்களின் பரிமாண வளர்ச்சி

அன்புசார் தமிழர்களே...

ஊரப்பாக்கம் “தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை” என்னும் அமைப்பைச் சேர்ந்த தமிழின் பால் காதல் கொண்ட தமிழர்கள், உயிர்களின் பரிமாண வளர்ச்சி கோட்பாட்டை தொல்காப்பியர் வழி நின்று விளக்கும் ஆய்வின் விளைவாக காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இந்த காணொளி முக நூலின் வழியே எனக்கு கிடைக்கப் பெற்றது.

இக்காணொளியானது முதலில், உயிர்களின் தோற்றம், கடவுள் வழிபடு தன்மை, மற்றும் உயிர்களின் பரிமாண வளர்ச்சியைப் பற்றி அனாக்சிமான்டர், எம்பிடாக்கிள்ஸ், அரிஸ்டாட்டில், டால்வின் ஆகிய அறிஞர்களின் கருத்தை சொல்கிறது.

பிறகு இவர்களுக்கு முன்னரேயே தொல்காப்பியர் உயிர்களை அறுவகையாக வகைப்படுத்திய வழியான,
“ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
- (தொல்காப்பியம்: பொருளதிகாரம்: 571)
என்பது பற்றி இக்காணொளி சொல்கிறது.

இக்காணொளியின் இறுதியில், “தமிழ் இலக்கியங்களில் அறிவுக் கருவூலங்கள் கொட்டிக் கிடக்கின்றது. இதை உணராததால் தான் தமிழன் கெட்டான். தமிழ் இலக்கியங்களை ஆய்வு நோக்கில் படியுங்கள்.” என்ற கருத்தைச் சொல்லியுள்ள நண்பர்கள் மேலும் ஒரு செய்தியையும் தருகிறார்கள்.

கலைகளில் சிறந்த, கவியில் ஆற்றல் மிக்க, புலியை முறத்தால் விரட்டி வீரத்தைக் காட்டிய என்னின பெண்டிரும், அறுபத்து நான்கு கலைகளில் சிறந்து விளங்கிய ஆடவரும் இன்று நான்கு சுவருக்குள் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர். இனியாவது அவர்களின் கைகளில் தமிழிலக்கியங்கள் தவழ வேண்டும் என்ற ஆவலையும் பதிவு செய்துள்ளனர்.

இக்காணொளியை வெளியிட்ட “தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை” நண்பர்களுக்கும், முகப்புநூல் வழியே எனக்கு பகிர்ந்த நண்பர் சசிதரன் அவர்களுக்கும் நன்றி...


தமிழார்வன்.

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிகு உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில் போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம் - தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!

நிலச்சுடர் மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர் வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல் மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிர்- கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ் செய் கிழங்கு - காணில்
நாவிலி னித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!
-பாரதிதாசன்.