Friday, March 7, 2014

கிட்டிப்புள்ளு


       கிட்டிப் புள்ளு என்பது தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்டு வரும் விளையாட்டு ஆகும்.


       கோவை மாவட்டம் உள்ளிட்ட கொங்கு நாட்டு பகுதிகளில் இது கில்லி - தண்டு என்ற பெயருடன் இன்று விளையாடப்பட்டு வருகிறது.

பல்வேறு பகுதிகள் பல்வேறு பெயர்கள்


கரகொட்டி, குட்டி-கோல் – கேரளம்
கிட்டிதக்கா – இந்தி மொழி
கிட்டிப்புள் – திருச்சி மாவட்டம்
கில்லி-தண்டா – மகாராட்டிரம்
குச்சிக்கம்பு, குச்சி-அடித்தல் – தமிழகப் பொதுவழக்கு
குல்லி-தண்டா – வங்கம்
சிலதா – நீலகிரித் தொதுவர்
சில்லாங்குச்சி – நெல்லை மாவட்டம்
திப்லி – ஆந்திர மாநிலக் கோண்டு மக்கள்
புள்ளுக்கிட்டி – குமரி மாவட்டம்

விளையாட்டு முறை


முதல் முறை


       முதல் வகையான கிட்டிப்புள்ளு விளையாட்டு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், இலங்கையிலும் காணப்படுகின்றது. இதற்கு ஒரு முழம் நீளத்திற்கு தரையில் ஒரு ஆழமான குழிக்கோடு ஏற்படுத்த வேண்டும். அந்த குழிக்கோட்டை கீந்து குழி என்று அழைப்பர்.  இவ்விளையாட்டில் இரண்டு அணிகள் உண்டு. ஒரு அணி, புள்ளை குழிக்கோட்டிலிருந்து தண்டிலால் அழுத்தி எதிர் அணியினர் இருக்கும் பக்கம் கீந்த வேண்டும். எதிர் அணியினர் கீந்தியபுள்ளைப் பிடிக்க வேண்டும். எதிர் அணியினர் புள்ளை தரையில் விழுமுன் தவ்விப் பிடித்துவிட்டால், கீந்தியவர் ஆட்டத்தை விட்டு வெளியேர வேண்டும். கீந்திய புள் தரையில் விழுந்த பின்னரே, எதிர் அணியினர் அந்த புள்ளை கையில் எடுத்தால், அப்புள்ளை திரும்ப கீந்தியவர் கிட்டி அல்லது தாண்டிலை நோக்கி வீசி எறிய வேண்டும். அவ்வாறு வீசுவதற்கு  முன்பு கீந்தியவர் கீந்து குழியில் இருந்து பின்னோக்கி இரண்டு தாண்டில் நீளம் அளவெடுத்து தரையில் வைக்க வேண்டும்.


       எதிர் அணியினர் வீசிய புள் தாண்டிலின் மீது பட்டால் கீந்தியவர் ஆட்டத்தை விட்டு வெளியேர வேண்டும். அப்படி புள் தாண்டில் மீது படாவிட்டால், கீந்தியவர் தாண்டிலால் கீந்து குழியில் இருந்து புள்ளை நோக்கி அளப்பார். எத்தனை தாண்டில் நீளம் தொலைவில், எதிர் அணியினர் வீசிய அந்த புள் இருக்கிறதோ அத்தனை புள்ளிகள் கீந்தியவர் அணியைச் சேரும். பின் மறுபடியும் அதே ஆட்டக்காரர் கீந்த வேண்டும்.



       இப்படி ஒரு அணியில் உள்ள அனைத்து ஆட்டக்காரர்களும் ஆட்டத்தை விட்டு வெளியேரும் வரை கீந்துவர். அனைவரும் வெளியேரிய நிலையில் அந்த அணி எத்தனை புள்ளிகள் எடுத்துள்ளதோ அதுவே அந்த அணியின் மதிப்பு ஆகும். இதே போன்று எதிர் அணியினரும் கீந்துவார்கள். யார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அந்த அணியினரே வென்றவர்கள் ஆவர்.

இரண்டாவது முறை


       இம்முறையில் கீந்து குழி கிடையாது. கீந்துதலும் கிடையாது. கிட்டியால் புள்ளை அந்தரத்திலேயே முடிந்தவரை தட்டிவிட்டு பின் கீழ்விழுந்த புள்ளின் ஒரு கூர்முனையில் கிட்டியால் தட்டி மேலெலும்பிய புள்ளை கீழ்விழும் முன் தொலைவில் அடித்து விலாச வேண்டும்.


       விலாசிய புள்ளை பின் கிட்டி கொண்டு அளக்க வேண்டும். பிறகு ம்று அணியினர் இதே போல் விளையாடுவர். யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர்களே வென்றவர்கள்.

       இக் கணினி உலகத்தில் இது போன்ற தமிழரின் பழங்கால விளையாட்டுகள் அழிந்து வருகின்றன.


நன்றி 
தமிழ் விக்கிபீடியா

No comments:

Post a Comment