Friday, June 8, 2012

தமிழன் கண்ட உயிர்களின் பரிமாண வளர்ச்சி

அன்புசார் தமிழர்களே...

ஊரப்பாக்கம் “தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை” என்னும் அமைப்பைச் சேர்ந்த தமிழின் பால் காதல் கொண்ட தமிழர்கள், உயிர்களின் பரிமாண வளர்ச்சி கோட்பாட்டை தொல்காப்பியர் வழி நின்று விளக்கும் ஆய்வின் விளைவாக காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இந்த காணொளி முக நூலின் வழியே எனக்கு கிடைக்கப் பெற்றது.

இக்காணொளியானது முதலில், உயிர்களின் தோற்றம், கடவுள் வழிபடு தன்மை, மற்றும் உயிர்களின் பரிமாண வளர்ச்சியைப் பற்றி அனாக்சிமான்டர், எம்பிடாக்கிள்ஸ், அரிஸ்டாட்டில், டால்வின் ஆகிய அறிஞர்களின் கருத்தை சொல்கிறது.

பிறகு இவர்களுக்கு முன்னரேயே தொல்காப்பியர் உயிர்களை அறுவகையாக வகைப்படுத்திய வழியான,
“ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
- (தொல்காப்பியம்: பொருளதிகாரம்: 571)
என்பது பற்றி இக்காணொளி சொல்கிறது.

இக்காணொளியின் இறுதியில், “தமிழ் இலக்கியங்களில் அறிவுக் கருவூலங்கள் கொட்டிக் கிடக்கின்றது. இதை உணராததால் தான் தமிழன் கெட்டான். தமிழ் இலக்கியங்களை ஆய்வு நோக்கில் படியுங்கள்.” என்ற கருத்தைச் சொல்லியுள்ள நண்பர்கள் மேலும் ஒரு செய்தியையும் தருகிறார்கள்.

கலைகளில் சிறந்த, கவியில் ஆற்றல் மிக்க, புலியை முறத்தால் விரட்டி வீரத்தைக் காட்டிய என்னின பெண்டிரும், அறுபத்து நான்கு கலைகளில் சிறந்து விளங்கிய ஆடவரும் இன்று நான்கு சுவருக்குள் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர். இனியாவது அவர்களின் கைகளில் தமிழிலக்கியங்கள் தவழ வேண்டும் என்ற ஆவலையும் பதிவு செய்துள்ளனர்.

இக்காணொளியை வெளியிட்ட “தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை” நண்பர்களுக்கும், முகப்புநூல் வழியே எனக்கு பகிர்ந்த நண்பர் சசிதரன் அவர்களுக்கும் நன்றி...


தமிழார்வன்.

4 comments:

  1. உற்றறிவது என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. உறுதல் என்பது தொடுதல் உணர்ச்சியையே குறிக்கும். தொடுவதினால் மட்டுமே சில உயிரினங்கள் தங்களை உணர்ந்து கொள்ள முடியும். இப்படிப் பட்ட உயிரினங்களை தொல்காப்பியர் ஓர் அறிவு உயிரினங்கள் என்று வகைப்படுத்தினார்.

      Delete
  2. தமிழ்த்தேனீக்கு வருகை புரிந்தமைக்கு நன்றிகள் நண்பரே.. தங்களின் வலைப்பூ மென்மேலும் பலசிறந்த தமிழ்ப்பதிவுகளை தமிழ்வாசகர்களுக்கு வழங்கிட வாழ்த்துக்கள். தங்கள் வலைப்பூவின் எழுத்துக்களின் பின்னணி வெண்மை நிறத்தில் இருந்தால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
    என்றும் அன்புடன்
    தமிழ்நேசன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மேலான பரிந்துரைக்கு நன்றி... எழுத்தின் பின்னணி நிறத்தை மாற்றிக் கொள்கிறேன்.

      Delete